Monday, 2 February 2015

மராட்டிய மன்னர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: "தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணியில் மராட்டிய மன்னர் துக்கோஜியின் கல்வெட்டு கிடைத்துள்ளது' என தஞ்சை கல்வெட்டு ஆய்வாளர் தில்லைகோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கல்வெட்டை தில்லைகோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், விஸ்வநாதன், கருணாநிதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.சோழர் காலத்தில் இவ்வூரில் பல அதிகாரிகள் இருந்துள்ளனர். முதலாம் ராஜராஜனின் காலத்தை சேர்ந்த கோன்கொற்றன் என்பவர் மலைநாட்டு படையெடுப்பில் கலந்து கொண்டும், நாஞ்சில் நாட்டை நிர்வாகிக்கும் அரசியல் அதிகாரியாக இருந்தார், என சோழர் காலத்து நாகர்கோவில் கொம்மண்டையம்மன் கல்வெட்டால் அறிய முடிகிறது.இச்சோழ அரசனின் 14வது ஆட்சி ஆண்டில் திருப்பெருந்துறை கோவிலுக்கு பெரியதேவர், அஸ்திரதேவர் என்ற இரு இறை திருமேனிகளை இவ்வூரினை சேர்ந்த பெண் ஒருவர் செய்து அளித்தார் என்பதும் திருப்பெருந்துறை கல்வெட்டின் மூலம் அறியலாம்.இவ்வூர் அகஸ்தீஸ்வரர் கோவில் சோழர் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பின், தஞ்சை ஆண்ட அரச மரபுகள் பலர் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டிருந்தனர், என்பதையும் தற்போது கிடைத்துள்ள மராட்டிய மன்னரான துக்கோஜி காலத்து கல்வெட்டு, "(கி.பி.1706) விய விருடம் தை 20ம் தேதி அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமிக்கு துக்கோஜி ராஜா குடுத்த சன்னதி நிலம் இருவேலி,' என்ற வரிகளுடன் இரண்டு அடி உயரத்திலும், அரை அடி அகலத்திலும் தமிழ் எழுத்தில் காணப்படுவதை கொண்டு அறியலாம்.இக்கோவில் சோழர் காலம் துவங்கி மராட்டியர் காலம் வரை சிறப்பாக திகழ்ந்துள்ளது எனவும், தற்போது திருப்பணி நடக்கும் நிலையில் இக்கல்வெட்டு கிடைத்துள்ளதை அறியலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர், 16.3.2011

Saturday, 31 January 2015

தேவரடியார் வழங்கிய தான கல்வெட்டு :தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, வெளிப்படுத்தியுள்ளனர். புதுகை மாவட்டம், குளத்தூர் தாலுக்கா, சத்தியமங்கலம் என்னும் ஊரில் சோழீஸ்வரர் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுள்ள கல்வெட்டு குறித்து அப்பகுதியினர் பாலு, முருகேசன், பாலசுப்பிரமணியன், பஞ்., செயலர் சண்முகம். ராமசாமி, பஞ்., யூனியன் பணி மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் தஞ்சை ஆய்வுக்குழுவினருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன் உள்பட வரலாற்று ஆய்வுக்குழுவினர், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று, கல்வெட்டை, படி எடுத்து, ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவு குறித்து பேராசிரியர் கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் கூறியதாவது: 

சோழீஸ்வரர் ஸ்வாமி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் எழுத்தமைதியை கொண்டு, நோக்கும்போது, 12,13ம் நூற்றாண்டு வகையை சேர்ந்தது என, கூறலாம். தற்போது, சோழீஸ்வரர் கோவில் எனப்படும் இந்த கோவில் அந்தக்காலத்தில் ராராசுரமுடைய நாயனார் கோவில் என்னும் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் துவக்கத்தில், மன்னர் பெயர் இருக்க வேண்டிய இடம் வெற்றிடமாக உள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள கடவுளை குறிப்பிடுவதற்காக, ராசராசசுரமுடைய நாயனார் என்பதற்கு, சுருக்கெழுத்தாக, ராராசுர என்னும் கிரந்த எழுத்து வடிவத்தில் எழுதியுள்ளனர். இந்த கோவிலுக்கு தானம் அளித்தவர், கோவிலை சார்ந்த தேவரடியார் காயக்கம்மர் எனவும், இவர் நம்பெருமாள் நாயனார் தேவதானமாக வீரபத்திரன் குடிகாட்டில் சுந்தர வாய்க்கால், கிணறு, ஏத்தம், இதை சூழ்ந்த மரங்களை பேருள்ளருளனாடி கொண்ட சோழ நாடாழ்வானிடம் விலை கொண்ட, அதற்கான விலை பொன் எண்பத்தாறும், நிச்சயித்து எழுதி தந்த சாசனம். இந்நிலத்தில் இருந்து வரும் பயிர் பதினாறு கால நெல்லும், ஆடி குறுவைக்கு அரை வரிசையும், அற்பசி குறுவைக்கு முக்கால் வரிசையும், பாக்கு, அடைக்காய், மூன்று பணமும் தருவதற்கு ஒப்புக்கொண்டு, கல்வெட்டை வெட்டி, தானமாக அளித்துள்ளார்.

இதில், ஸ்ரீ காங்கேயன், முடி கொண்ட நாடாழ்வான், முத்தரையன், அருந்தவன் விழுப்பிரையர், அழகிய சோழ நாடாழ்வான் தற்குறி ஓமழகிய, முடிபேரையர் கூத்தன் அரையன் எழுத்து என, சாட்சி கையெழுத்தும் போட்டுள்ளனர். இந்த கல்வெட்டில் இருவர் தற்குறி என, குறிப்பிடப்பட்டு, அவர்களுடைய கையெழுத்துக்கு, கீரல் எனப்படும் குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நன்றி தினமலர் 18.12.2013

Monday, 24 February 2014

பழையாறை கோயிலில் வீரன் தலை மீது சிவன் தாண்டவமாடும் சிற்பம்

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழையாறை சோமநாதசுவாமி கோயிலில் பொந்திக் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், மன்னர் சரபோஜி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று அந்த கோயிலில் உள்ள சோமகமலாம்பிகை என்றழைக்கப்படும் அம்மன் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டு தென் திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சிற்றுருவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நின்ற நிலையில் உள்ள சிலையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலையின் தலை மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்குமேல் கொணடு வந்து வலது காதை தொடும் நிலையில் ஊர்த்துவ தாண்டவ காட்சி வடிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். 

இதுகுறித்து கோவிந்தராஜன், கண்ணதாசன் ஆகியோர் கூறியதாவது: திருநாவுக்கரசர் “நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“ என்று பாடியுள்ளார். இன்று அதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கோயில் பக்தர்களுக்கு திருவடி சாத்துவதற்கு அடையாளமாக சடாரி வைக்கப்படுவதை காணலாம். தமிழகத்தில் வேறு எந்த சைவக்கோயில்களிலும் இவ்வாறான நடைமுறை இல்லை. திருஞானசம்பந்தர் “கங்கை தங்கும் முடியாரவர் போலும், எங்களுச்சி யுறையுமிறையாரே“ என்று தன் பாடலில் சிவனின் திருவடியை தாங்கியதாக குறிப்பிடுகிறார்.


மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “சென்னிப்பத்து“ என்ற தலைப்பில் இறுதி இரண்டு அடிகளில் சிவனின் திருவடியை தலையில் தாங்கியதாக குறிப்பிடுகிறார். இவ்வாறாக 3 நாயன்மார்க ளும் சிவனின் பாதத்தை தங்களின் தலையில் தாங்கியதாக குறிப்பிடுகின்றனர். தென்திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கனின் தலையின்மேல் இரண்டு சிவலிங்கங்கள் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. பழையாறை அம்மன் சன்னதியின் அடித்தளங்கள் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தை சேர்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காண இயலாத இந்த சிவதாண்டவத்தை தாங்கும் வீரனின் சிற்பம் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம். இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

நன்றி : தினகரன் 24.1.2014 

Sunday, 23 February 2014

நாகை காரோணமும், நாவுக்கரசர் கண்ட நடராஜரும்


கடுவையாறு வங்கக் கடலோடு கலக்குமிடத்தில் வணிகக்கப்பல்கள் வந்து செல்லும் ஊர் நாகப்பட்டினமாகும்.சங்க இலக்கியமான குறுந்தொகையில் இரண்டு பாடல்களைப் பாடிய நன்னாகையார் இவ் ஊரைச் சேர்ந்தவர் என்பர்
நாகை
சங்க காலத்திலும்,பல்லவர் காலத்திலும் இவ்வூர் நாகை என்ற பெயருடன் விளங்கியது.பல்லவர் ஆட்சியின் கீழ் இப்பகுதியிருந்துள்ளது. பல்லவர்கள் கல்வெட்டில் நாகை என்ற சொல்லாட்சி நாகநாதர் கோயிலில் முதல் முதலாக பொறிக்கப்பட்டுள்ளது என்பதை முனைவர் பா.ஜெயக்குமார் தமது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அக் கல்வெட்டு அக் கோயிலில் காணமுடியவில்லை, பல்லவர்களின் சமகாலத்து நாயன்மார்களும் தஙகள் தேவாரப் பாடல்களில்  

கலங்கள் சேர் கடல் நாகை, வங்கமலி கடனாகை 
என கடற்கரையை ஒட்டியுள்ள நாகையைக் குறிக்கும் விதத்தில் சுட்டுகினற்னர்.

பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் கல்வெட்டுகளில் சத்திரிய சிகாமணி 
வளநாட்டு பட்டினக்கூற்றத்து நாகப்படடினம்என்றும்,கெயமாணிக்க வளநாட்டு 
பட்டினக்கூற்றத்து நாகப்பட்டினமான சோழகுலவல்லி பட்டினம்எனவும்
பொறித்துள்ளனர். இக் கல்வெட்டுகளை நோக்கும் போது பல்லவர் காலத்தில் சிறு வணிகத்தலமாக விளங்கிய நாகை பல்நாட்டு வணிகர்களும் வந்து செல்லும் பட்டினமாகவும்,சமய, பண்பாட்டுத் தலமாகவும் விளங்கியது என்பதை உணரமுடிகிறது.

பாசுபத சைவம்
தமிழகத்தில் கச்சி, குடந்தை, நாகைக் காரோணங்களை நாயன்மார்கள் தங்கள் தேவாரப் பாடல்களில் போற்றியுள்ளனர். இத் தலங்கள் பாசுபத சைவர்களின் முக்கிய வழிபாட்டுகுரியனவாக திகழ்ந்துள்ளன. இங்கு சமணம், பௌத்தம், சைவம,வைணவம் பேன்ற பல சமயங்கள் சிறப்போடு விளங்கின.சமய மறுமலர்ச்சியினால் சமணம் சைவத்தினாலும்,பௌத்தம் வைணவத்தாலும் வீழ்ச்சியுற்றன. சமண,பௌத்த தடயங்களை இன்றும் இந்நகரங்களில் காணமுடிகின்றது. பாசுபத சைவம் நாகையில் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

நாகைக் காரோணர்
நாகை நகரின் மையத்தில் பெரியகோயில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படும் நாகை காரோணம் கோயில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசரும். ஞானசம்பந்தரும் கடல்நாகை காரோணத்தான் என்று இக் கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனை தம் பாடல்களில் பணிந்தேத்துகின்றனர்.முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் ஆட்சியாண்டினைக் குறிக்கும் கல்வெட்டுகளில் 
காரோணமுடைய மகாதேவர் என்றும். இவ்வரசர்களுக்குபின் ஆட்சிக்கு வந்தவர்கள் 
உடையார் திருக்காரோணமுடையார் என்றும் இறைவனைச் சுட்டியுள்ளனர்.  
சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாக நாகை காரோணம் உள்ளது. இங்கு இறைவன் சுந்தரவிடங்கராக எழுந்தருளியுள்ளார்.இவ்விடங்கரைக் கல்வெட்டுகளில் அழகவிடங்கர் எனக் குறிப்பிடுகின்றனர். காரோணம் என்ற நிலையில் பாசுபத சைவத்துடன் தொடர்புடையது இதன் முலம் அறியமுடிகின்றது. 

நடராஜர்
காரோணர் சன்னதியை அடுத்து தியாகராஜர் சன்னதியுள்ளது. அதன் சுவற்றில் வெளிச்சம் குறைந்த நிலையிலுள்ள சிற்பம் கண்ணையும்,கருத்தையும் கவருவதாகவுள்ளது. இதுபோன்ற சிற்பத்தினைத் தமிழகத்தில் காண்பது மிகவும் அரிது. அர்ச்சகரின் தீபஒளியில் மட்டுமே அச்சிற்பத்தினை காணமுடியும்.அச்சிற்பம் நடராஜர் சிற்பமாகும்.இதன் வலதுபுறம் ஜுரகரேஸ்வரர் சிற்பம் மகிச்சிறியளவில் உள்ளது. ஆடவல்லானின் ஆடலுக்கு இணையாக அம்மையும் ஆடுவதாகவும் வலதுகால் கீழாக முயலகனும் ஒருபுறம் வாணன் குடமுழா இசைக்க மறுபுறம் பூதகணங்கள் வாத்திய கருவிகளை கையாளுகின்ற காட்சியும் அமைந்துள்ளது.ஆடல் இறைவனின் தலைக்கு மேலாக இடதுபுறத்தில்  கங்காதேவியின் உருவமும் வலதுபுறத்தில் தட்சிணாமுர்த்திக்குரிய உருத்திராட்ச மாலையும்,பை மற்றும் மயிற்பீலியினாலான சாமரம் போன்றவையும்
வடிக்கப்பட்டுள்ளதால்(உயர்ந்த பாசுபத விரதம் ஞானம் எனப்படும், சிவன் யோகஆசிரியனாக ஞானத்தை வழங்கும் குருவாகவிளங்குகிறார் என ம,இராசமாணிக்கனார் தமது நுலில் குறித்துள்ளார்) இப்பகுதியானது தட்சிணாமூர்த்தியைக்குறிப்பதாக வடிக்கப்பட்டுள்ளது.இச்சிற்பத் தொகுதியை நோக்கும்போது அது சோழர் காலத்தைச் சேர்ந்ததாக அறியமுடிகின்றது.இதனை வடிப்பதற்குக் காரணமாக அமைவது நாவுக்கரசர் நாகையில் கண்ட நடராஜரின் 
ஆடல்காட்சியாகும். அக்காட்சியை அவர் தம்முடைய திருவாக்கினால் 

நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ்சூடி
மறையொலி பாடியாடன் மயானத்து மகிழ்ந்தமைந்தன்
கறைமலி கடல்சூழ்நாகைக் காரோணங் கோயில்கொண்ட
இறைவனை நாளுமேத்த விடும்பைபோ யின்பமாமே.
என்று சுட்டுகின்றார்.

நாகை காரோணத்தில் மற்றவர் காணிக்கை
தஞ்சை பெரியகோயிலில் மாமன்னன் முதலாம் இராஜராஜனின் ஆட்சிகாலத்தில் மற்றவர்கள் தெய்வத்திருமேனிகளை செய்தளித்தது போல் நாகை காரோணத்திலும் பல சோழர் கால அரசியல் தலைவர்கள் தங்கள் பங்களிப்பாக பல தெய்வத்திருமேனிகளை செய்தளித்ததுள்ளனர். அவைஅழகவிடங்கர், அர்த்தநாரி, ஆடவல்லான். 
தட்சிணாமுர்த்தி போன்றவையாகும். இச் சிற்பங்களைப்  பற்றி 
கல்வெட்டுகளும்,தேவாரமும் புகழ்ந்து பேசுகின்றன.

முதலாம் இராஜராஜனும்,முதலாம் இராஜேந்தினும்
இக் கோயிலின் மூலவர் கருவறையின் அருகில் உள்ள வெளிப்பிரகாரத்தில் காணப்படும் தட்சிணாமுர்த்தி கோட்டத்தில் இருபக்கங்களிலும் அழகிய அரசர்களின் உருவத்தோற்றத்துடன் கைகளில் மலர்ஏந்தி நின்ற நிலையில் காட்சியளிகின்றனர். அவர்களில் இக் கோட்டத்தின் வலது பக்கத்தில் உள்ளவர் சிற்பத் தோற்றத்தில் ஆடையானது அலங்காரமின்றி எளிய உருவில் காணப்படுகின்றார். மேலும் கோட்டத்தின் இடது பக்கத்தில் உள்ளவர் அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய ஆடையுடன் காணப் படுகின்றார். இக் கோயிலில் காணப்படும் பழமையான கல்வெட்டுகள் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தவையாகும். அதனடிப்படையில் நோக்கும் போது இவ்விரு சிற்பங்களும் அச் சோழஅரசர்களை குறிப்பதாக உள்ளதை உணரமுடிகின்றது.

பலல்வர் காலத்தில் நாவுக்கரசர் கண்ட நடராஜர் திருவுருவம் சோழ அரசர்களால் பாசுபதசைவத்துடன தொடர்புபடுத்தப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகின்றது. இச்சிற்பத்தில் ஆடவல்லான், கங்காதரர் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகிய   மூன்று  திருவுருவங்களும் ஒரே வடிவாகக் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இவ்வாறாக மூன்று திருவுருவங்களும் ஒருங்கே அமைந்த சிற்பத்தைத் தமிழகத்தில் எங்கும் காண்பது அரிதாகும். அத்தகு பெருமையினை நாகைக்கோரணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Friday, 21 February 2014

சிவன் கோவிலில் ராஜராஜன் சதய விழா சிற்ப காட்சி: ஆய்வாளர்கள் புது தகவல்

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், திருப்புகலூர் சிவன் கோவிலில், தஞ்சையை ஆண்ட சோழமன்னன் முதலாம் ராஜராஜனும், அவனுடைய பட்டத்தரசிகளில் ஒருவருமான பஞ்சவன் மாதேவி சதய திருநாளில் அஸ்திரதேவரும், திருவிழா எழுந்தருளும் திருமேனிக்கும் அபிஷேகம் செய்ய கலசம் கொடுத்த சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்புகலூரில் பஞ்சவன்மாதேவி ராஜராஜன் சதய விழா சிற்பக்காட்சி
இச்சிற்பத்தை பொந்தியாகுளம் தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், தஞ்சை சரபோஜி கல்லூரி பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது. தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் மெய்கீர்த்தியுடன் துவங்கும், 16வது ஆட்சியாண்டு கல்வெட்டின் மூலம், "ஸ்ரீ ராசராசன் மகாதேவியார், நம்பிராட்டியார் நக்கன் தில்லையழகியான பஞ்சவன் மாதேவியார் தாமும், ஸ்ரீ ராசராச தேவரும் பிறந்தருளிய சதயம்தோறும், தீர்த்தமான நிலம் கொடுத்ததும், சித்திரை சதயத்தை தவிர பிற, 11 மாதங்களில் வரும் சதயத்துக்கு, 108 கலசம் கொடுத்ததும்' அறிய முடிகிறது. இதற்காக, புண்ணியாகம் செய்ய அக்காலத்தில், ஒன்பது பேர் இருந்துள்ளனர் என்பதும், அவர்களில் ஒருவர் புண்ணியாகம் செய்ய நின்ற நிலையிலும், அவரை அடுத்து, எட்டு பேர் நிற்பதாகவும் கல்வெட்டு தகவல்கள் மற்றும் சிற்பம் மூலம் தெரிய வருகிறது. இத்தகைய காட்சியை இப்போதும் காண்பவர், உணரும் வகையில், சிற்ப வடிவத்தில் வடித்துள்ளது தான் பெரும் சிறப்பு. சிற்ப காட்சியில், பஞ்சவன் மாதேவியும், அவருடைய கணவரான முதலாம் ராசராசன், கலசத்தை இரு கையால் தாங்கி, வழங்குவது போலவும், புண்ணியாகம் செய்பவர்களில் முதன்மையானவர் கையில் கெண்டியும், ஒரு கை சின் முத்திரையும் தாங்கி மந்திரம் கூறுவது போலவும், அவருக்கு பின்புறத்தில், அட்டமங்கலம் ஏந்தும் எட்டு பேர்களும் இருப்பது போலவும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் சதய திருவிழாவை தனது ஆட்சிக்காலத்தில் நடத்தியதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து, கூறி வந்துள்ளனர். அம்மன்னன் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், சதய திருவிழா என்னும் பெயரில் அமைந்த விழா, தொன்று, தொட்டு, தற்போதும் தஞ்சை பெரியகோவிலில் நடக்கிறது. இத்தகைய விழாவை தனது ஆட்சிக்காலத்தில் ராஜராஜன் வெகு சிறப்பாக நடத்தியது, மேற்கண்ட சிற்ப காட்சி மூலம் தற்போது, மேலும் உறுதிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி : 18.12.2013 தினமலர்

Sunday, 10 February 2013

திருவையாறு (பஞ்சநதீஸ்வரர்) வடகயிலாயம் கோயிலில் புராண காலச் சோழர் சிற்பம் கண்டுபிடிப்பு

திருவையாறு (பஞ்சநதீஸ்வரர்) வடகயிலாயம் கோயிலில்
புராண காலச் சோழர் சிற்பம் கண்டுபிடிப்பு
     திருவையாறு வடகயிலாயம் கோயிலில் புராண காலச் சோழ அரசனான ககுத்தன் சிற்பத்தினை வரலாற்று ஆர்வலர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
        வடகயிலாயம் என்று அழைக்கப்படும் ஒலோகமாதேவீஸ்வரம் முதலாம் இராஜராஜனின் மனைவி தம் பெயரால் கட்டியதாகும். இக்கோயிலில் உள்ள கருவறை மற்றும் முகமண்டபத்தின் வெளியில் இருபுறங்களிலுள்ள சுவரில் காணும் தோரணங்களில் சிற்றுருவ புடைப்பு சிற்பங்களை வரலாற்று ஆர்வலர்கள் பொந்தியாகுளம் பள்ளித் தலைமையாசிரியர் திரு தில்லை கோவிந்தராஜன், மன்னை இராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன், புலவர் செயராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
         இது குறித்து ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் கோஷ்டத்தின் மேல் உள்ள தோரணத்தில் பிச்சாடனர், காலசம்காரர், லிங்கத்தை வழிபடும் அரசன், எனப் பல சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் திரை செலுத்துவதற்காக சிற்றரசர் ஒருவர் திரைப்பொருளுடன் யானை மீது அமர்ந்து யானைகள் மற்றும் குதிரைகளுடன் காட்சி தருகின்றார். அச்சிற்பத்தை அடுத்துள்ள தோரண சிற்பத்தில் காளை (மாடு) தலையை மேலே உயர்த்திய நிலையில் உள்ளது. அதன் மீது கிரீட மகுடத்துடன் ஒருவர் அக்காளையின் திமில்மீது ஒரு கையை ஊன்றியும், ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இது சூரிய குலத் தோன்றலான இச்சவாகுவின் மகனும், சோழர் குலத்தின் முன்னோனும் ஆகிய ககுத்தனின் உருவச் சிற்பமாகும். இவரைப் பற்றி விஷ்ணு புராணத்திலும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும் குறிக்கப்படுவதுடன் கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், குலோத்துங்கசோழனுலா, இராஜராஜனுலா போன்றவற்றில் அசுரர்களுடன் சண்டை செய்வதற்கு இந்திரனை எருதாக்கி (காளை) அதன் திமில் மீது அமர்ந்து சண்டை செய்தான் என்று குறிப்பிடுகின்றன. மேலும் இம்மன்னனைப் பற்றி சாரலாச் செப்பேட்டிலும், கன்னியாகுமரி கல்வெட்டிலும் குறிப்புகள் உள்ளன. தம் கணவனின் சூரிய குலத்தின் பெருமைகளை நிலைநாட்டும் பொருட்டு இச்சிற்பத்தினை உலோகமாதேவியார் இக்கோயிலுள் அமைத்துள்ளார் எனத் தெரிவித்தனர். 


kakutthan.JPG
                    ககுத்தனின் சிற்பம்

 

//////////////////
CHOLA SCULPTURE OF PURANA PERIOD FOUND IN NORTH KAILASH OF TIRUVAIYARU (PANCHANATHISVARAR)TEMPLE
     A sculpture of Kakutthan, the purna period Chola king was found in the North Kailash of Tiruvaiyaru Panchaneethisvarar temple by Historical enthusiasts.  North Kailash also known as Olakamatheswaqram was built by Rajaraja I, in the name of his wife. A team comprising of Mr Thillai Govindarajan (Headmaster, Ponthiyakulam School), Mr Kannadasan (Tamil Professor of Rajagopalaswami College, Mannargudi) and Pulavar Jayaraman have visited the sanctum sanctorum and mukamandapa. On the torana of the wall on either sides bas relief sculptures. According to them on the torana of the kosta, Bikshadana, Kalasamharar, a king worshipping linga and other sculptures were 
found. Of them a chieftain was found sitting on an elephant to remit tribute to the king. He was found with elephants and horses.  giving tribute.JPG Giving tribute
Next to the sculpture a bull is found shifting its head. On it a person is found with kirta makuta keeping a hand on the hump of the bull. His legs are found in folded sitting position. This sculpture is the son of Ikshavaku and the ancestors of Cholas, Kakutthan. There are references in Vishnu Puranam, Tiruvalankadu copper plates. There are also references in Kalingattuparani, Kamba Ramayanam, Kulothunga Cholanula and Rajarajanula in which it was said that in order to fight with the asuras Indra was made as bull and he sat on the hump of the bull and fought. There are also inforation about him in Sarala copper plate and Kanyakumari inscription. According to them, in order to expose the greatness of Surya race of his husband, Ulokamadevi set up the sculpture in this temple.


           Monday, 10 December 2012

ஆதனூர் பெரமனார் கோயில்சமணர், அய்யனார் சிற்பங்கள் ஆய்வு

தில்லை கோவிந்தராஜன்
நெஞ்சையள்ளும் தஞ்சை மாவட்டத்தில் சங்க காலம் தொட்டே அனைத்துச் சமயங்களும் வளர்ச்சி பெற்றன. அதன்பின் சோழர் காலத்தில் சமணம்,பௌத்தம், சைவம்,வைணவம் எனப் பல சமயங்கள் போற்றி வளர்க்கப்பட்டன என்பதனை இன்றும் கண்ணுறலாம். 
attanur (2).JPG
சமணச்சிற்பம்
சமணம் இம் மாவட்டத்தில் வளர்ச்சி பெற்றிருந்த்து என்பதற்கு ஆதாரமாக களஆயவில் பல சமணத் தீர்தங்கரர்களின் சிற்பங்களை காணமுடிகின்றது. அடஞ்சூர்  புலவர் அரங்கநாதன் அவர்களின் அழைப்பில் அவ்வூரில் குளக்கரையில் கல்வெட்டு உள்ளதாக கூறியதன் பயனாக களத்திற்கு  பேராசிரியர் கண்ணதாசன், அருணாசலம். உமாமகேஸ்வரன் ஆகியோருடன் சென்றேன். புலவரின் மகன் மருதநம்பி எங்களுக்கு வழிகாட்டினார். அவருடைய துணையுடன் தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம், ஆதனூர் பெரமனார் கோயில் குளக்கரையில் ஆய்வு மேற்கொண்டபோது எங்களுக்கு முதலில் ஏமாற்றம் எற்பட்டது. அப்பொழுது அங்கு வந்த குமார் என்பவர் இங்கு சிலகாலங்களுக்கு முன்பாக தலைஉடைந்த அம்மன் சிற்பம் இருந்தது எனக் கூறினார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ரவி, சக்தி போன்ற உள்ளுர் நண்பர் அருகிலிருந்த  களத்து  மேட்டினைக் காட்டி இந்த இடத்தில் கோயில் போன்ற அமைப்பு இருந்தது என்றும் அங்கு செங்கள் கற்கள் எச்சங்களாகயுள்ளதை காட்டினர். அவ்விடத்திற்கு சற்றுதொலைவில்  புதர் மறைவில் ஏதோ  கற்கள் இருப்பது தெரிந்தது. அதனை நாங்கள் பார்த்போது சிற்பங்கள் என்பதை அறிந்து கொண்டோம்.அவை தலைகுப்புற இருந்தன அதனை நேராக நிமிர்த்தி  ஆய்வு செய்தபொழுது அவற்றுள் தலையற்ற நிலையிலிருந்தது சமண சிற்மென்றும்.இரண்டாவது சிற்பம் இடுப்பிற்கு கீழ் உடைந்த நிலையில் அய்யனார் சிற்மென்றும் கண்டோம்.

sen9.JPG
செந்தலை சமணத்துறவியைக்குறிக்கும் கல்வெட்டு
பிரம்ம தேவன் வழிபாடு சமண மதத்தில் ஏழு கன்னியரோடு இணைத்து வழிபட வேண்டும் என சமண அறநூல்கள்  கூறுகின்றன.பிரம்ம தேவர் அய்யன்,அய்யனார், பிரம்மசாத்தன், சாஸ்தா.சாத்தையா,என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இக்கோயில் காணும அய்யனார் பிரம்ம சாத்தன் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளது, பிற்காலத்தில் பிரம்மசாத்த அய்யனார் பெரமானார் அய்யனார் என்று அழைக்கப்பட்டுள்ளார் என்பதை ஆய்வில் காணமுடிகின்றது. 
இவ்வூருக்கு அருகாமையில்  செந்தலை கோயில் அமைந்துள்ளது அக் கோயில் கல்வெட்டில் கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு  12ஆவது கா.......ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்து வட கவிர........பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான் கொண்டு கடவ, எனக் குறிக்கப்படுகிறது. மேலும் இக் கோயலில் காணப்படும் தூண் சிற்பங்களில்அய்யனார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.  
இச் சிற்பங்களை காணும்போது சமணத்துறவிகள் வாழ்ந்த பகுதியான செந்தலையிலிருந்து.தென் மேற்கு திசையில் நான்கு கி,மீ.,தூரத்தில் சமணர்,அய்யனார் சிற்பங்கள் காணப்படும் கிராம்மான ஆதனூர் உள்ளது. ஆகையால் இப்பகுதியில் சோழர்காலத்தில்சமணமதம்         தழைத்தோங்கியிருந்ததும். சமணத்துறவிகளுக்கு சோழ மன்னர்கள் தக்க மரியாதை வழங்கினர் என்பதே உண்மையாகும்.