Monday 2 February 2015

மராட்டிய மன்னர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: "தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணியில் மராட்டிய மன்னர் துக்கோஜியின் கல்வெட்டு கிடைத்துள்ளது' என தஞ்சை கல்வெட்டு ஆய்வாளர் தில்லைகோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கல்வெட்டை தில்லைகோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், விஸ்வநாதன், கருணாநிதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.சோழர் காலத்தில் இவ்வூரில் பல அதிகாரிகள் இருந்துள்ளனர். முதலாம் ராஜராஜனின் காலத்தை சேர்ந்த கோன்கொற்றன் என்பவர் மலைநாட்டு படையெடுப்பில் கலந்து கொண்டும், நாஞ்சில் நாட்டை நிர்வாகிக்கும் அரசியல் அதிகாரியாக இருந்தார், என சோழர் காலத்து நாகர்கோவில் கொம்மண்டையம்மன் கல்வெட்டால் அறிய முடிகிறது.இச்சோழ அரசனின் 14வது ஆட்சி ஆண்டில் திருப்பெருந்துறை கோவிலுக்கு பெரியதேவர், அஸ்திரதேவர் என்ற இரு இறை திருமேனிகளை இவ்வூரினை சேர்ந்த பெண் ஒருவர் செய்து அளித்தார் என்பதும் திருப்பெருந்துறை கல்வெட்டின் மூலம் அறியலாம்.இவ்வூர் அகஸ்தீஸ்வரர் கோவில் சோழர் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பின், தஞ்சை ஆண்ட அரச மரபுகள் பலர் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டிருந்தனர், என்பதையும் தற்போது கிடைத்துள்ள மராட்டிய மன்னரான துக்கோஜி காலத்து கல்வெட்டு, "(கி.பி.1706) விய விருடம் தை 20ம் தேதி அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமிக்கு துக்கோஜி ராஜா குடுத்த சன்னதி நிலம் இருவேலி,' என்ற வரிகளுடன் இரண்டு அடி உயரத்திலும், அரை அடி அகலத்திலும் தமிழ் எழுத்தில் காணப்படுவதை கொண்டு அறியலாம்.இக்கோவில் சோழர் காலம் துவங்கி மராட்டியர் காலம் வரை சிறப்பாக திகழ்ந்துள்ளது எனவும், தற்போது திருப்பணி நடக்கும் நிலையில் இக்கல்வெட்டு கிடைத்துள்ளதை அறியலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர், 16.3.2011

No comments:

Post a Comment