Monday 2 February 2015

மராட்டிய மன்னர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: "தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணியில் மராட்டிய மன்னர் துக்கோஜியின் கல்வெட்டு கிடைத்துள்ளது' என தஞ்சை கல்வெட்டு ஆய்வாளர் தில்லைகோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கல்வெட்டை தில்லைகோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், விஸ்வநாதன், கருணாநிதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.சோழர் காலத்தில் இவ்வூரில் பல அதிகாரிகள் இருந்துள்ளனர். முதலாம் ராஜராஜனின் காலத்தை சேர்ந்த கோன்கொற்றன் என்பவர் மலைநாட்டு படையெடுப்பில் கலந்து கொண்டும், நாஞ்சில் நாட்டை நிர்வாகிக்கும் அரசியல் அதிகாரியாக இருந்தார், என சோழர் காலத்து நாகர்கோவில் கொம்மண்டையம்மன் கல்வெட்டால் அறிய முடிகிறது.இச்சோழ அரசனின் 14வது ஆட்சி ஆண்டில் திருப்பெருந்துறை கோவிலுக்கு பெரியதேவர், அஸ்திரதேவர் என்ற இரு இறை திருமேனிகளை இவ்வூரினை சேர்ந்த பெண் ஒருவர் செய்து அளித்தார் என்பதும் திருப்பெருந்துறை கல்வெட்டின் மூலம் அறியலாம்.இவ்வூர் அகஸ்தீஸ்வரர் கோவில் சோழர் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பின், தஞ்சை ஆண்ட அரச மரபுகள் பலர் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டிருந்தனர், என்பதையும் தற்போது கிடைத்துள்ள மராட்டிய மன்னரான துக்கோஜி காலத்து கல்வெட்டு, "(கி.பி.1706) விய விருடம் தை 20ம் தேதி அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமிக்கு துக்கோஜி ராஜா குடுத்த சன்னதி நிலம் இருவேலி,' என்ற வரிகளுடன் இரண்டு அடி உயரத்திலும், அரை அடி அகலத்திலும் தமிழ் எழுத்தில் காணப்படுவதை கொண்டு அறியலாம்.இக்கோவில் சோழர் காலம் துவங்கி மராட்டியர் காலம் வரை சிறப்பாக திகழ்ந்துள்ளது எனவும், தற்போது திருப்பணி நடக்கும் நிலையில் இக்கல்வெட்டு கிடைத்துள்ளதை அறியலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர், 16.3.2011

Saturday 31 January 2015

தேவரடியார் வழங்கிய தான கல்வெட்டு :தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, வெளிப்படுத்தியுள்ளனர். புதுகை மாவட்டம், குளத்தூர் தாலுக்கா, சத்தியமங்கலம் என்னும் ஊரில் சோழீஸ்வரர் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுள்ள கல்வெட்டு குறித்து அப்பகுதியினர் பாலு, முருகேசன், பாலசுப்பிரமணியன், பஞ்., செயலர் சண்முகம். ராமசாமி, பஞ்., யூனியன் பணி மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் தஞ்சை ஆய்வுக்குழுவினருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன் உள்பட வரலாற்று ஆய்வுக்குழுவினர், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று, கல்வெட்டை, படி எடுத்து, ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவு குறித்து பேராசிரியர் கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் கூறியதாவது: 

சோழீஸ்வரர் ஸ்வாமி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் எழுத்தமைதியை கொண்டு, நோக்கும்போது, 12,13ம் நூற்றாண்டு வகையை சேர்ந்தது என, கூறலாம். தற்போது, சோழீஸ்வரர் கோவில் எனப்படும் இந்த கோவில் அந்தக்காலத்தில் ராராசுரமுடைய நாயனார் கோவில் என்னும் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் துவக்கத்தில், மன்னர் பெயர் இருக்க வேண்டிய இடம் வெற்றிடமாக உள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள கடவுளை குறிப்பிடுவதற்காக, ராசராசசுரமுடைய நாயனார் என்பதற்கு, சுருக்கெழுத்தாக, ராராசுர என்னும் கிரந்த எழுத்து வடிவத்தில் எழுதியுள்ளனர். இந்த கோவிலுக்கு தானம் அளித்தவர், கோவிலை சார்ந்த தேவரடியார் காயக்கம்மர் எனவும், இவர் நம்பெருமாள் நாயனார் தேவதானமாக வீரபத்திரன் குடிகாட்டில் சுந்தர வாய்க்கால், கிணறு, ஏத்தம், இதை சூழ்ந்த மரங்களை பேருள்ளருளனாடி கொண்ட சோழ நாடாழ்வானிடம் விலை கொண்ட, அதற்கான விலை பொன் எண்பத்தாறும், நிச்சயித்து எழுதி தந்த சாசனம். இந்நிலத்தில் இருந்து வரும் பயிர் பதினாறு கால நெல்லும், ஆடி குறுவைக்கு அரை வரிசையும், அற்பசி குறுவைக்கு முக்கால் வரிசையும், பாக்கு, அடைக்காய், மூன்று பணமும் தருவதற்கு ஒப்புக்கொண்டு, கல்வெட்டை வெட்டி, தானமாக அளித்துள்ளார்.

இதில், ஸ்ரீ காங்கேயன், முடி கொண்ட நாடாழ்வான், முத்தரையன், அருந்தவன் விழுப்பிரையர், அழகிய சோழ நாடாழ்வான் தற்குறி ஓமழகிய, முடிபேரையர் கூத்தன் அரையன் எழுத்து என, சாட்சி கையெழுத்தும் போட்டுள்ளனர். இந்த கல்வெட்டில் இருவர் தற்குறி என, குறிப்பிடப்பட்டு, அவர்களுடைய கையெழுத்துக்கு, கீரல் எனப்படும் குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நன்றி தினமலர் 18.12.2013