Thursday 10 May 2012

மாறநேரி களஆய்வும் பங்குனி உத்திரமும்

     சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணத்தின் எச்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வரலாற்றுலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக மாறநேரிக்குப் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்களப்பணியின்போது முனைவர் ஜம்புலிங்கம், பேராசிரியர் லட்சுமணமூர்த்தி,தொல்லியல்துறை திரு.பி.கருணாநிதி ஆகியோர் உடன் வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் மாறநேரி என்னும் சிற்றூர் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி கோயில்கல்வெட்டில் மாறனெரியான சினசிந்தாமணியான சதுர்வேதி மங்கலம் (தென்னிந்தியக்கல்வெட்டுகள் தொகுதி 6, எண் .1) எனக் குறிக்கப்படுவதால் சிந்தாமணி என்ற சொல் சமணத்தைக் குறிப்பதாக இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படியில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. களப்பணியின்போது மாறநேரியில் உள்ள பசுபதிஈஸ்வரர்கோயிலில்   முகமண்டபத்தில் வலது பக்கத்தில் நிலைக்காலில் உள்ள கல்வெட்டு கவனத்தை ஈர்த்தது. தலைகீழாக இருந்த அக்கல்வெட்டின்மூலமாக அக்கோயில்
நிருபகேசரி ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டுள்ளதையும்,அக்கோயிலுக்கு விளக்கு தானம் வழங்கியதையும் அறியமுடிந்தது. அக்கோயிலில் பல பல்லவர் காலச் சிற்பங்களும், சோழர் காலச் சிற்பங்களும் காணப்படுகின்றன. பல்லவர் காலச் சிற்பங்களில் துர்க்கை மிகவும் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது. அக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறவதால் சிற்பங்கள் வேறு இடத்திற்கு  மாற்றப்பட்டுள்ளன. கள ஆய்வின் போது வினாயகர் இருக்கவேண்டிய இடத்தில் ஒரு பீடத்தை மட்டுமே காணமுடிந்தது. அப்பீடமானது சமண சமயத்தின் தீர்த்தங்கரரான மகாவீரருக்குரிய சிம்மபீடமாகவுள்ளதைப் பார்க்க முடிந்தது, ஒருகாலகட்டத்தில் சமயக் காழ்ப்புணர்வின் காரணமாக சமணர் சிற்பம் அங்கிருந்து அகற்றப்பட்டு, அப் பீடத்தில் வினாயகர் சிற்பத்தை வைத்துள்ளார்கள் என்பதை அறியமுடிந்தது. முதல் களப்பணியில் திரட்டப்பட்ட செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. 
மாறநேரியில் உள்ள கல்வெட்டு
மறுபடியும் அங்கு செல்ல ஆர்வம் வரவே இரண்டாம்முறையாக அக்கோயிலுக்குச் சென்றேன்.  இம்முறை என்னுடன்  பேராசிரியர் கண்ணதாசன் சேர்ந்துகொண்டார். களப்பணியின்போது அக் கோயிலில்  திருப்பணி தொடர்பான பணிகளை மேற்கொண்டுவரும் திரு அருணகிரி என்பவரின் உதவியோடு கருவறைக்கு முன்னால் உள்ள தூண் கல்வெட்டினை முழுமையாக ஆய்வு செய்தோம். அப்போது பல அரிய செய்திகளை அறியமுடிந்தது. சோழமன்னன் கோப்பரகேசரிவர்மன் என்பவனின் 11ஆவது ஆட்சியாண்டில் கொடுக்கப்பட்ட தானத்தைப் பற்றி அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. . அவ்வூர் கிளியூர் நாட்டு பிரமதேயத்தைச் சேர்ந்தது என்பதை அக்கல்வெட்டு மூலம் அறியமுடிந்தது. அக் கோயில் அம்பலத்தைப் பராமரிப்பவனுக்கு நிலக்கொடை தரப்பட்டுள்ளது.அக் கோயிலில் தினமும் கார்த்திகை முதலாக பங்குனி உத்திரம் வரை இரண்டு வேளையும் நெருப்பிடவேண்டுமென்றும், பங்குனி உத்திரம் தொடங்கி ஆடி உத்தராடம் வரை தண்ணீர் ஊற்ற வேண்டுமென்றும் அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குத் தருமமாகக் கொடுக்கப்பட்ட நிலமும் அதன் எல்லைகளும் அதில் குறிக்கப்பட்டுள்ளதை நோக்கும் போது இப்பகுதியில்  சோழர் காலத்தில்  பங்குனி உத்திரம் வழிபாடுச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளதை அறியமுடிந்தது. இவையனைத்திற்கும் மேலாக சங்க இலக்கியங்களில் இவ்வூர் நேரிவாயல் என்றுக் குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போது இதன் பெருமையை அறிந்து வியந்தேன்.
சமண ஆய்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட களப்பணி மற்றொரு களப்பயணத்திற்குத் தூண்டுகோலாக இருந்தது மட்டுமன்றி சோழர் காலத்திலேயே பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை எங்களுக்கு அறிவித்ததை அறிந்து மகிழ்ந்தேன்.  
நன்றி
களப்பணியின்போது உடன் வந்த முனைவர் பா.ஜம்புலிங்கம், பேராசிரியர் இலட்சுமணமூர்த்தி, திரு பி.கருணாநிதி, பேராசிரியர் கண்ணதாசன் மற்றும் கோயிலில் கல்வெட்டைப் படிக்க உதவியாக இருந்த திரு அருணகிரி.