Friday 21 February 2014

சிவன் கோவிலில் ராஜராஜன் சதய விழா சிற்ப காட்சி: ஆய்வாளர்கள் புது தகவல்

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், திருப்புகலூர் சிவன் கோவிலில், தஞ்சையை ஆண்ட சோழமன்னன் முதலாம் ராஜராஜனும், அவனுடைய பட்டத்தரசிகளில் ஒருவருமான பஞ்சவன் மாதேவி சதய திருநாளில் அஸ்திரதேவரும், திருவிழா எழுந்தருளும் திருமேனிக்கும் அபிஷேகம் செய்ய கலசம் கொடுத்த சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்புகலூரில் பஞ்சவன்மாதேவி ராஜராஜன் சதய விழா சிற்பக்காட்சி
இச்சிற்பத்தை பொந்தியாகுளம் தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், தஞ்சை சரபோஜி கல்லூரி பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது. தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் மெய்கீர்த்தியுடன் துவங்கும், 16வது ஆட்சியாண்டு கல்வெட்டின் மூலம், "ஸ்ரீ ராசராசன் மகாதேவியார், நம்பிராட்டியார் நக்கன் தில்லையழகியான பஞ்சவன் மாதேவியார் தாமும், ஸ்ரீ ராசராச தேவரும் பிறந்தருளிய சதயம்தோறும், தீர்த்தமான நிலம் கொடுத்ததும், சித்திரை சதயத்தை தவிர பிற, 11 மாதங்களில் வரும் சதயத்துக்கு, 108 கலசம் கொடுத்ததும்' அறிய முடிகிறது. இதற்காக, புண்ணியாகம் செய்ய அக்காலத்தில், ஒன்பது பேர் இருந்துள்ளனர் என்பதும், அவர்களில் ஒருவர் புண்ணியாகம் செய்ய நின்ற நிலையிலும், அவரை அடுத்து, எட்டு பேர் நிற்பதாகவும் கல்வெட்டு தகவல்கள் மற்றும் சிற்பம் மூலம் தெரிய வருகிறது. இத்தகைய காட்சியை இப்போதும் காண்பவர், உணரும் வகையில், சிற்ப வடிவத்தில் வடித்துள்ளது தான் பெரும் சிறப்பு. சிற்ப காட்சியில், பஞ்சவன் மாதேவியும், அவருடைய கணவரான முதலாம் ராசராசன், கலசத்தை இரு கையால் தாங்கி, வழங்குவது போலவும், புண்ணியாகம் செய்பவர்களில் முதன்மையானவர் கையில் கெண்டியும், ஒரு கை சின் முத்திரையும் தாங்கி மந்திரம் கூறுவது போலவும், அவருக்கு பின்புறத்தில், அட்டமங்கலம் ஏந்தும் எட்டு பேர்களும் இருப்பது போலவும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் சதய திருவிழாவை தனது ஆட்சிக்காலத்தில் நடத்தியதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து, கூறி வந்துள்ளனர். அம்மன்னன் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், சதய திருவிழா என்னும் பெயரில் அமைந்த விழா, தொன்று, தொட்டு, தற்போதும் தஞ்சை பெரியகோவிலில் நடக்கிறது. இத்தகைய விழாவை தனது ஆட்சிக்காலத்தில் ராஜராஜன் வெகு சிறப்பாக நடத்தியது, மேற்கண்ட சிற்ப காட்சி மூலம் தற்போது, மேலும் உறுதிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி : 18.12.2013 தினமலர்

No comments:

Post a Comment