தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழையாறை சோமநாதசுவாமி கோயிலில் பொந்திக் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், மன்னர் சரபோஜி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அந்த கோயிலில் உள்ள சோமகமலாம்பிகை என்றழைக்கப்படும் அம்மன் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டு தென் திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சிற்றுருவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நின்ற நிலையில் உள்ள சிலையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலையின் தலை மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்குமேல் கொணடு வந்து வலது காதை தொடும் நிலையில் ஊர்த்துவ தாண்டவ காட்சி வடிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “சென்னிப்பத்து“ என்ற தலைப்பில் இறுதி இரண்டு அடிகளில் சிவனின் திருவடியை தலையில் தாங்கியதாக குறிப்பிடுகிறார். இவ்வாறாக 3 நாயன்மார்க ளும் சிவனின் பாதத்தை தங்களின் தலையில் தாங்கியதாக குறிப்பிடுகின்றனர். தென்திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கனின் தலையின்மேல் இரண்டு சிவலிங்கங்கள் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. பழையாறை அம்மன் சன்னதியின் அடித்தளங்கள் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தை சேர்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காண இயலாத இந்த சிவதாண்டவத்தை தாங்கும் வீரனின் சிற்பம் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம். இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
நன்றி : தினகரன் 24.1.2014